×

சூரியக்கோயில் என்ற சிறப்புடன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் அத்திமுகம் ஐராவதேஸ்வரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அத்திமுகம் என்னும் ஊரில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமைவாய்ந்த ஐராவதேஸ்வரர் கோயில். ஒரே கோயிலில் இரண்டு மூலவர்கள் இருப்பதும், சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருப்பதும் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம் என்று சிவனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் களைகட்டும்.ஐராவதயானை வழிபட்ட ஈசன் என்பதால் ‘ஐராவதேஸ்வரர்’ என்று இறைவன் அழைக்கப்படுகிறார். இதை உணர்த்தும் வகையில் இங்குள்ள லிங்கத்தின் மீது யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் குன்னத்தூரில் உள்ள சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது பாம்பு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அத்திமுகம் ஐராவதேஸ்வரர் லிங்கத்தில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது அபூர்வங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.விருத்தாசூரன் என்னும் அரக்கன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வந்தான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள், தங்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபமடைந்த இந்திரன், தனது வாகனமாக ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும், அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் நீங்க, என்ன செய்ய வேண்டும் என்று இந்திரன் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான். அப்போது அகத்தியநதி ஓடும் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று அசரீரி ஒலித்துள்ளது. இதையடுத்து இத்தலத்திற்கு வந்த இந்திரன், அங்கே சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டான். ஐராவத யானையும் அவனோடு சிவனை வழிபட்டது. இதனால் இறைவன் ‘ஐராவதேஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு, வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது தலவரலாறு. ஹத்திஎன்றால் யானை. இறைவனின் முகத்தில் இருப்பது யானை முத்திரை. இதனால் இந்த ஊர், ‘ஹத்திமுகம்’ என்று அழைக்கப்பட்டு அதுவே, காலப்போக்கில் அத்திமுகம் என்று மாறியதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இதேபோல் இங்குள்ள விநாயகர் அட்சர மாலையுடன் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அகங்காரம் அழித்து ஞானம் வழங்குவார் என்பதால் ‘சம்ஹார தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்ப காலத்தில் மணலாக இருந்த, இந்த புற்று காலப்போக்கில் இறுகி கல்லாகி விட்டதாக கூறப்படுகிறது. இதிலிருந்தே கோயிலின் பிரதானத்தை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் சிவனடியார்கள்.இந்திரனுக்கே தோஷம் போக்கிய தலம் என்பதால், மனிதர்களின் அனைத்து தோஷங்களும் நீங்க, ஐராவதேஸ்வரர் துணை நிற்பார் என்பது தொடரும் நம்பிக்கை. இதேபோல் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இறைவனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறினால் இறைவனுக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாத்தியும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதே போல் சூரிய பூஜைக்கோயில் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் தை முதல்வாரத்தில் சூரியஒளிக்கதிர்கள் நேரடியாக இறைவன் மீது பாய்ந்து வழிபடுகிறது. இது மிகவும் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இங்கு இறைவனின் வாகனமான நந்தி, அவரது மூலஸ்தானத்திற்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கிறது. சூரியன் வழிபடுவதற்காகவே நந்திதேவன் வழிவிட்டு சற்று விலகி நிற்கிறார் என்பதும் சிவனடியார்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது….

The post சூரியக்கோயில் என்ற சிறப்புடன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் அத்திமுகம் ஐராவதேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Iravadeswar ,Athimugam ,Brahmahati Dosha ,Sun ,Iravadeswarar temple ,Hosur ,Krishnagiri district ,Iravadeswarar ,
× RELATED சூளகிரியில் அவரை விளைச்சல் அமோகம்